November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையை கட்டியெழுப்ப உலக வங்கி ஆதரவு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 18ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா இதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆரம்பித்துள்ள இந்த செயற்றிட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றால் இலங்கை எதிர்பார்க்கும் இலக்குகளை விரைவாக அடைய முடியுமென அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களில் இலங்கை எதிர்கொண்ட கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உலக வங்கி வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலக வங்கியின் தலைவருக்கு இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை முழுமையான பொருளாதார மறுசீரமைப்பு பாதையில் பிரவேசித்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த தசாப்தத்தில் அதிக பொருளாதார வளர்ச்சி வேகத்துடன், நாடு முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்காக சர்வதேச நாணய நிதியத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புகளை முழுமையாக அமுல்படுத்த எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.