ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
இம்மாதம் 15ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள “G77+ சீனா” அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78ஆவது வருடாந்த அமர்வின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை அவர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்காக பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய தொழில்நுட்ப பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்தும், சிறுவர் , மகளிர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பாதுகாப்பு பதில் அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.