November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள தனி வீடுகள், லயன் வீடுகள் என தோட்டப்பகுதிகளில் முகவரி இல்லாத அனைவருக்கும் முகவரி வழங்கப்படும். இதற்கான திட்டம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது இலக்கம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது, அப்பணி நிறைவுபெற்ற பின்னர் அனைத்து தரவுகளும் தோட்ட நிர்வாகம், கிராம அதிகாரி, அஞ்சல் மா அதிபர் ஆகிய தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படும் என பரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.