November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா; ஒரே பார்வையில் இன்றைய நிலவரம்

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 272 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் இது வரையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளரர்களின் எண்ணிக்கை 11,607 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கடந்த ஒரு மாத காலப்பகுதியில் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியாகொட மீன் சந்தை ஊடாக உருவான கொரோனா கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 8129 ஆக உயர்வடைந்துள்ளது.

குணமடைந்தோர் எண்ணிக்கையிலும் உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும்  332 பேர் குணமடைந்து இன்றைய தினம் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இதற்கமைய இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5581 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 46 வைத்தியசாலைகளில் 6005 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

மேலும் இருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் கிரேண்ட்பாஸ் பிரதேசங்களைசேர்ந்த  61 மற்றும் 68 வயதுடைய பெண்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக கொவிட் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டு மாதங்கள் செல்லலாம்

மினுவாங்கொட கொரோனா வைரஸ் கொத்தணியை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு மாதங்கள் செல்லலாம் என்று பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த கொத்தணி ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மினுவாங்கொட ஆடை தொழிற்சாலை நிறுவனத்திலிருந்து முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டு, இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்றது.

கண்டி மாவட்டத்தில் 41 தொற்றாளர்கள்

கண்டி மாவட்டத்தில் இதுவரை 41 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளடங்களாக 1,122 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, கண்டி மாவட்டச் செயலாளர் சந்தன தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலான கூட்டம், மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்றது.

இதேவேளை, மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு 14 பொலிஸ் குழுக்கள்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக 14 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 14 பேரின் தலைமையில் இந்த குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதனடிப்படையில், இன்று  முதல் குறித்த குழுக்கள் மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வெலிசர பொருளாதார மத்திய நிலையத்தை திறக்க நடவடிக்கை

மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக வெலிசர பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளது.

பொலிஸாரின் உதவியுடன் குறித்த பொருளாதார மத்திய நிலையம் முழுமையாக தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கமத்தொழில் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள இரத்மலானை, பொகுந்தர, நாரஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை நாளைய தினம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை அறிவித்துள்ளார்.

இதற்கமைய, அங்குள்ள சேவையாளர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகள் இன்று  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன

கல்வி அமைச்சு கட்டடம்  மூடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இனங்காணப்பட்ட நிலையில் கல்வியமைச்சின் பத்தரமுல்லை இசுறுபாய கட்டடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தற்போது, குறித்த கட்டடம் முழுமையாக கிருமியகற்றல் நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

கொழும்பு துறைமுகத்தில் பணியாற்றும் மேலும் 100 ஊழியர்களுக்கு இன்று காலை பிசிஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

துறைமுக ஊழியர்களின் ஆரோக்கியத்திற்காகக் குறித்த பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தொற்றுநோய் அபாயத்தை எதிர்கொண்டு கொழும்பு துறைமுகத்தின் நடவடிக்கைகள் சுகாதார வழி காட்டிகளைப் பின்பற்றி தொடர்ச்சியாகச் செயற்படும் என்றும் துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.

துறைசார் ரீதியில் ஊரடங்கு அனுமதி பத்திரம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றம் பணிகளை முன்னெடுத்துச்செல்ல துறைசார் ரீதியில் ஊரடங்கு அனுமதி பத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் பொலிஸாரினால் வழங்கப்படும் விண்ணப்பப்படிவம் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும்.

அதனை secretary@mws.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் அனுமதி பத்தரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென  பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.