January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயார்”

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ‘செனல் 4’ வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு சம்பவம் நடந்திருந்தால் அது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் ‘செனல் 4’ என்பது புலம்பெயர்ந்தோருடன் இணைந்து செயற்படும் ஒரு ஊடக அமைப்பாகும் என்றும், அந்த ஊடகத்திற்கு ஈஸ்டர் தாக்குதலில் இறந்த மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு 29 மாதங்களுக்கு முன்னர் இது குறித்து பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை முன்வைத்த போது, தன்னை தேசிய ஒருமைப்பாட்டைக் சீர்குலைப்பர் என்று கூறியவர்கள் இப்போது அந்த சம்பவம் தொடர்பில் நீதி கோரி கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தற்போது 42 வழக்குகள் உள்ளன. அதேபோன்று தாக்குதல் தொடர்பாக உள்நாட்டில் அல்லாமல் சர்வதேச விசாரணையை நடத்த அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.