ஆகஸ்ட் 31ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பஸ் மற்றும் ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க போக்குவரத்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போதைய நிலைமையில் பஸ் போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதில் நெருக்கடிகளை சந்திப்பதாகவும் இதனால் பஸ் கட்டணங்களை எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்றால் போன்று அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கலாம் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை பெட்ரோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க ஆட்டோ உரிமையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.