மக்கள் பிரதிநிதியாக மக்களுக்காக குரல் எழுப்புவது தனது கடமை என்றும், அதனை தடுக்க ஜனாதிபதிக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும் போது தேவையற்ற கேள்விகளை கேட்டு பாராளுமன்றத்தில் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதாக ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் பதிலளித்தே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மக்கள் பிரச்சினைகளை சட்டவாக்கத்துறையில் முன்வைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதையே தாம் செய்வதாகவும், மக்களின் பணத்தில் சம்பளம் மற்றும் சேவை வசதிகள் மற்றும் பல்வேறு சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பெறும் மக்கள் பிரதிநிதிகளின் பணி இதுவாகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர், தாம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தான் எப்போதும் முன்வைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பணத்தால் நிர்வகிக்கப்படும் மக்கள் பிரதிநிதியாக,மக்களுக்காக குரல் எழுப்புவது தனது கடமை என்றும், அதனை நிறுத்த எவருக்கும் இடமளிக்க மாட்டேன் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.