February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஐநாவின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்”

இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் – அன்ட்ரூ ப்ரான்ஸிடம் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ள மார்க்-அன்ட்ரூ ப்ரான்ஸ், அரசியல் தலைவர்களை சந்தித்து வருகின்றார்.

அந்த வகையில் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் ஐநாவின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்படவேண்டும் என்று சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள மார்க்-அன்ட்ரூ ப்ரான்ஸ், இவ்விடயத்தில் இருதரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தி எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பது பற்றி எதிர்வரும் காலங்களில் விரிவாகப் பேசலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அண்மைய காலங்களில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பகிரங்கமான முறையில் வெளிப்படுத்தப்பட்டுவரும் இனவாதக் கருத்துக்கள் மற்றும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இடம்பெறும் பௌத்த சிங்களமயமாக்கம் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது மார்க்-அன்ட்ரூ ப்ரான்ஸிடம் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.