ஐக்கிய நாடுகள் சபையின் ஆரம்பகால உறுப்பு நாடு என்ற வகையில், அனைத்து செயற்பாடுகளுக்கும் இலங்கை தனது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றது என்பது ஐநா பொதுச் செயலாளரின் கருத்தாக உள்ளது என்று ஐநாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்சே தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்த உலகின் 20 நாடுகளில் விரைவாக மீண்டு வரும் நாடாக இலங்கை முன்னோடியாக திகழ்கின்றது என்றும் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிரான்சே குறிப்பிட்டுள்ளார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவை ஐநாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கொழும்பில் சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம், மனித உரிமைகளைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க செயல்முறை நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குதல் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக இதன்போது விளக்கமளித்துள்ள நீதி அமைச்சர், இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை போருக்குப் பின்னர் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை ஸ்தாபித்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் ஐநா பிரதிநிதி கேட்டறிந்துகொண்டார்.