ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே வேறுபாடான நிலைப்பாடுகளால் கட்சிக்குள் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று இன்னுமொரு குழுவினரும் கூறிவரும் அதேவேளை, மற்றுமொரு குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பஸில் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராவது தொடர்பில் இதுவரையில் அவர் இணக்கம் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் வேட்பாளராவதற்கு முன்னர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும்.
இந்நிலையில் நாமல் ராஜபக்ஷவை வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இளம் மற்றும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கட்சி தலைமைக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை கட்சியின் செயலாளரும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனபோதும் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.
இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாதுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.