13 ஆவது அரசியலமைப்பு திருத்த விடயத்தில் தமிழ் கட்சிகளின் நகர்வு சரியானது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கத் தூதுவர், அங்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வடக்கின் காணி அபகரிப்பு, பௌத்த மத ஆக்கிரமிப்பு பற்றியும் குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது அவர்கள் அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.