வன்முறைகளின் போது தற்காப்புக்காக திருப்பித் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறிமை வன்முறையை தூண்டும் செயல் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
”பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்” என்ற தலைப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டப் பகுதியொன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மக்கள் பிரதிநிதியொருவர் மக்களைத் தூண்டும் வகையில் பொறுப்பற்ற கருத்து வெளியிட்டமை தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் கவனம் செலுத்தியுள்ளார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு இலக்காகி சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வதாகவும், எவரேனும் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டால் அல்லது அதற்கு துணை போனால் அவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டம் கடுமையாக செயற்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.