January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கையாள முடியும் – சுகாதார அமைச்சர்

இலங்கையில் கொவிட்- 19 வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கையாள முடியுமாக உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் முன்வைத்துள்ள சுகாதார அறிவுறுத்தல்களுக்கும் மேலாக இலங்கையில் சுகாதார சேவைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட்- 19 வைரஸ் பரவல் முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்ததாகவும், இப்போது பரவி வருகின்ற இரண்டாம் அலையையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் பாராளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

இதுவரையில் நாட்டு நிலைமைகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முடிந்தமைக்கு பலமான சுகாதாரத்துறையே காரணம் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுகாதாரத்துறையில் உள்ள சகல அதிகாரிகளிடமும் உயர்மட்ட அறிவு, உயரிய திறமை போன்றன காணப்படுவதால் இதுவரையில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தி, செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் மந்திரிக்கப்பட்ட மட்பானையொன்றை ஆற்றில் வீசியது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நாட்டை கொரோனாவில் இருந்து மீட்க தான் கடலில் குதிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.