April 17, 2025 12:57:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குருந்தூர் மலையில் பொங்கல் விழா: தென்பகுதியில் இருந்து வந்தவர்களால் பரபரப்பு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இந்துக்கள் இன்று பொங்கல் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ள நிலையில், தென்பகுதியில் இருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்டுள்ள தேரர்கள் உள்ளிட்ட பௌத்த அமைப்புகளை சேர்ந்த குழுக்களால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை நிலவுகின்றது.

இந்நிலையில் அப்பகுதியில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் பெருமளவான பொலிஸாரும், கலகம் அடக்கும் பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பொங்கல் நிகழ்வால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று அதற்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் முல்லைதீவு நீதிமன்றத்தை நாடிய போதும், புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொங்கல் நிகழ்வுக்கு முன்னர் தென்பகுதியில் இருந்து பஸ்களில் பிக்குகள் உள்ளிட்ட பெருமளவான சிங்களவர்கள் அந்தப் பகுதிக்கு வந்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.