வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழுத்தம் கொடுப்பதாகவும் இதனை அனுமதிக்க முடியாது என்றும் பிவித்துறு ஹெல உறுமய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை மகிழ்விக்கவே ஜனாதிபதி இவ்வாறு செயற்படுகின்றார் என்றும், அவ்வாறு காணிகளை விடுவிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்றும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
2009இல் யுத்தம் முடிவடையும் போது இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் 26,812 ஏக்கர் நிலப்பகுதி கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் அவற்றில் தற்போது வரையில் 22,919 ஏக்கர் நிலப்பகுதி மக்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியின் அழுத்தத்தால் மேலும் 377 ஏக்கர் காணிகளை எதிர்வரும் 6 மாதங்களில் விடுவிப்பதற்கு இராணுவம் இணங்கியுள்ளதாகவும் இது அனுமதிக்கப்படக் கூடியது அல்ல என்றும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.