File Photo
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றையே தமிழ் மக்கள் கோரி வருவதாகவும், இதன்படி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் இரா. சம்பந்தனால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதமொன்றிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்திடமும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றை தமிழ் மக்கள் கோரி வருவதாகவும், அந்த வகையில் சமஷ்டி முறையில் அதனை அடைவதற்காக 1956 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் ஆணை வழங்கி வருவதாகவும் அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதியளித்திருந்ததாகவும் இதன்படி அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தன் ஜனாதிபதியை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை சுயாட்சிக் கட்டமைப்பு தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்தவொரு சமரசமும் இன்றி அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நீண்ட காலமாக தாமதிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவாறு இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் எனவும் சம்பந்தன் குறித்த கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.