இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம். ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
”இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது. இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம். வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும் நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் அண்மையில் இராமாயணம் தொடர்பில் விவாதம் இடம்பெற்ற போது, இராவணன் தமிழரா, சிங்களவரா என்ற வாதங்கள் தமிழ், சிங்கள எம்பிக்களுக்கு இடையே இடம்பெற்றது.
இது தொடர்பில் இன்று கல்முனையில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”இராவணன் தமிழில் இராவணன் சிங்களத்தில் இராவணா என்று சொல்வார்கள். இந்த இராவணன் என்பவர் யார்? இந்த இராவணன் தமிழனா? சிங்களவனா? என்று விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. உண்மையில் இந்த விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விடயமல்ல. படித்த மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இவ்விடயம் விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஆனால் இவ்விடயம் பாராளுமன்றத்தில் விவாதிப்பது என்பது ஒரு அதிசயமாகவும் ஒரு அருவருக்கத்தக்க விடயமாகவும் நாம் பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புராணக் கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள் தமிழர் பெயர்களாகவோ அல்லது சிங்களவர் பெயர்களாகவோ அல்லது சமஸ்கிரத மொழி பேசுகின்றவர்களின் பெயர்களாகவோ இல்லாமல் அரபு மொழிக்கு நெருக்கமான இருக்கின்றன. இதில் இராமன்-ரஹ்மான் இராவன் -இராவணன் சீதா -சைதா நுஃமான் -அனுமான் என்பது ஒரு மொழியில் தான் வருகின்றது. ஏன் இவ்வாறு வருகின்றது என்பதை ஆராயும் போது இது முஸ்லீம்களின் ஒரு சிறிய வரலாறு தான் என்பதுடன் பின்னர் அது கற்பனையாக புராணக் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் எங்களுக்கு ஏற்பட்ட தெளிவான கருத்தாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.