மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரையான நகர்சேர் கடுகதி ரயில் சேவை வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இந்த வருடம் மடுமாதா திருவிழா கூட்டுத் திருப்பலிப் பூஜையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதை அடுத்து மடுமாதாவின் திருச்சுரூப பவனி இடம்பெற்றது. திருவிழாவில் நாட்டின் பலபாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து பாராட்டுக்குரியது எனவும் வத்திக்கான் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் ஆசீர்வாதமும் இதற்கு கிடைக்கும் எனவும் மடு திருவிழாவில் கலந்து கொண்ட இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க பிரதிநிதி பிரையன் உடைக்வே ஆண்டகை தெரிவித்தார்.
நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத் தலைவர்களுக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய பிரையன் அவர்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் மத முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் மதத் தலைவராக மாறுவாரா என்பது அவரவர் செய்யும் செயற்பாடுகளிலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம் அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம் மன்னார் மாவட்டத்தை வலுசக்தி மையமாக உருவாக்க முடியும். மேலும், பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன். மேலும், இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.
அடுத்த மாதம் முதல் மன்னாரிலிருந்து கொழும்புக்கு நகர்சேர் கடுகதி ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சார்ளஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படுகிறது. அவரின் வேண்டுகோளுக்கு அமைய வவுனியாவில் சீனி தொழிற்சாலையொன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.