இலங்கையின் பல மாவட்டங்களிலும் நிலவும் கடும் வறட்சியுடனான காலநிலையால் பல பிரதேசங்களில் நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
ஆறுகள் உள்ளிட்ட பிரதான நீர்நிலைகளின் நீர் மட்டங்கள் குறைவடைந்து செல்வதினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தேசிய நீர்வழங்கல் சபையின் கீழ் செயற்படும் 344 நீர் விநியோக நிலையங்களின் 20 நிலையங்களில் நேர அட்டவணை அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறிப்பிட்ட பிரதேசங்களில் நீர்விநியோக திட்டங்களுக்கான முழுநேர நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வறட்சி நிலைமையால் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 49,867 குடும்பங்களைச் சேர்ந்த 163,111 பேர் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.