November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரணிலை எதிர்க்க வேண்டுமென கோட்டாபயவுக்கு வலியுறுத்தல்!

13வது அரசியலமைப்பு திருத்த விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்க்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் சுயாதீன அணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள அதிகாரங்களை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளதுடன், அது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியானவர், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கிடைத்த மக்கள் வாக்குகளின் அடிப்படையில் தெரிவானவர் என்பதனால், கோட்டாபயவின் கொள்கைகளுக்கு எதிரானவராக இருக்க கூடாது என்று பொதுஜன பெரமுனவினர் கூறி வருகின்றனர்.

இதன்படி 13 ஆம் திருத்த விடயத்தில் தேசத்தின் நலனுக்கு பாதகமான விதத்தில் தற்போதைய ஜனாதிபதி செயற்படுவதாகவும், இதனால் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமைதியாகயிருக்க முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியை பிரதிபலிக்கும் புதிய அரசியலமைப்பு என்ற வாக்குறுதியின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றார் என்றும், இவ்வாறான நிலைமையில் ஒற்றையாட்சியை இல்லாமல் செய்வதற்காக முயற்சிகளை பார்த்துக்கொண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் எவ்வாறு மௌனமாக இருக்க முடியும் எனவும் சன்ன ஜயசுமன கேள்வி எழுப்பியுள்ளார்.