November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13 ஆம் திருத்தம்: சபையில் ஒத்துழைப்பைக் கோரிய ஜனாதிபதி!

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், பாராளுமன்றம் உடன்படுமானால் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தத்திற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், மாவட்ட விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்தவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாண சபைகளுக்கு போட்டியிடும் உரிமையை வழங்கவும், 25 வீத அல்லது கூடுதலான பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசாங்கத்தின் அதிகாரப் பட்டியல், மாகாண சபை அதிகாரப் பட்டியல்,ஒருங்கிணைந்த பட்டியல் ஆகியவற்றை மீள் ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் பெறப்படும் எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு மாகாண சபைகள் செயற்படும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை சபையொன்றை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் அரசியல் முறையில் இருந்தோ அல்லது அரசியலில் இருந்தோ அகற்ற முடியாத நிரந்தரமான காரணியாக மாகாணசபை மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொதுமக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக் கூடிய வினைத்திறனான மற்றும் வீண்விரயமற்ற, ஊழலற்ற மாகாண சபை கட்டமைப்பொன்றை கட்டியெழுப்புவதன் ஊடாக வலுவான முறைமை மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் பொலிஸ் அதிகாரம் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது எந்த விதமான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு கடினமானதாக அமையலாம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலில் ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் உடன்பாட்டுக்கு வந்து நாட்டின் எதிர்காலத்திற்காக 13 ஆவது திருத்தத்தை கட்டம் கட்டமாக எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை ,காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஆரம்பித்துள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யும் நோக்கில் தரவு உள்ளீட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காணமல் போனவர்களுக்காக சான்றிதழ் வழங்குவதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.