அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவினால் புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி வருவதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திக்க நிமல் லான்சா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி தன்னால் அமைக்கப்படும் கூட்டணியில் குறைந்தது 50 பாராளுமன்ற உறுப்பினர்களாவது இணைந்துகொள்வார்கள் என்று லான்சா குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறாக கூட்டணி அமைக்கப்படுமாக இருந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமைத்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கும், இதன்போது பிரதமர் வேட்பாளரை தனது அணியில் இருந்து களமிறக்குவதற்கும் அவர் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது கூட்டணியை அமைப்பது தொடர்பில் நிமல் லான்சா கடந்த வாரங்களில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் விமல் அணி மற்றும் டலஸ் அணி மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா அணி ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் லான்சா தலைமையில் அமைக்கப்படும் கூட்டணிக்கு ஆதரவளிக்க கூடாது என்று பஸில் ராஜபக்ஷ, அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.