இலங்கையில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படும் என்று வெளியாகும் தகவல்களை இலங்கை மத்திய வங்கி நிராகரித்துள்ளது.
இலங்கையில் இந்திய ரூபாய் பயன்பாடு தொடர்பாக வெளியாகும் தகவல்கள் தொடர்பாக மத்திய வங்கி விளக்கமளித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
உள்ளூர் கொடுக்கல் வாங்கல்களுக்கு இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக இலங்கை ரூபாயே இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுலாவுக்கு இந்தியா முக்கிய ஆதாரமாக இருப்பதால், வங்கி பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியானது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்திய ரூபாயை ஒரு நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அங்கீகரிப்பது இந்திய ரூபாயை இலங்கையில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கு செல்லுபடியாகும் நாணயமாக மாற்றாது என்பதையும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கும் இலங்கையின் செல்லுபடியாகும் நாணயமான இலங்கை ரூபாவை மாத்திரமே பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.