நாட்டில் தற்போதைய நிலைமையில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கு முகம்கொடுக்க தயாராக வேண்டும் என்றும் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரிரை விடுத்துள்ளார்.
இதன்படி சிறுபோக அறுவடை முடிவடைந்த உடனேயே குறுகிய காலத்திற்கு வேறு தானிய வகைகளை வயல்களில் பயிரிடக் கூடியவாறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
விவசாய வேலைத்திட்டங்கள் தொடர்பாக அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது, உணவு நெருக்கடி ஏற்படுமாக இருந்தால் அதற்கு முகம்கொடுக்கக் கூடியாவறு பயறு, கௌபி போன்ற மாற்று தானியங்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக விவசாயிகளை ஊக்குவிக்க தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். எவ்வாறாயினும் தற்போதைய வறட்சி நிலைமையால் சில பிரதேசங்களில் குறித்த தானியங்களை பயிரிடுவதில் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அம்பாந்தோட்டை, பொலனறுவை போன்ற மாவட்டங்களில் அந்த பயிர் செய்களை செய்ய முடியுமென்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அங்கு சிறுபோக அறுவடையின் பின்னர் வயல்களில் காணப்படும் ஈரத்தன்மையை பயன்படுத்தி குறுகிய காலத்திற்கு குறிப்பிட்ட தானிய வகைகளை பயிரிட முடியுமாக இருக்கும் என்றும், இதற்கு தேவையான ஊக்குவிப்புகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.