
இலங்கையின் தென் மாகாணத்தில் நிலவும் வறட்சியால் உடவலவ நீர்த் தேக்கத்திற்கு சமனல வாவியில் இருந்து நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால் தென்மாகாணத்தில் மின்சாரத் தடை ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் வறட்சி நிலைமையால் 50,000 ஏக்கர் நெற் பயிர்செய்கை பாதிப்படைந்துள்ளதாகவும், அதனை பாதுகாக்க நீரை விநியோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் சமனல வாவியில் இருந்து நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சமனல வாவியில் இருந்து 10 நாட்களுக்கு உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் 1 மணித்தியாலம் முதல் 3 மணித்தியாலங்களுக்கும் இடையில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு செய்ய தவறினால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமையில் போதுமான அரிசியோ, நெல்லோ கையிருப்பில் இல்லாமை நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும், இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் மகிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.