January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அமைச்சர் விடுத்த அறிவித்தல்!

குறைந்த பட்சம் 50 வீதத்திற்கும் அதிகமான எரிபொருள் இருப்புக்களை தொடர்சியாக பேணுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 101 எரிபொருள் நிலையங்கள் 92 ஒக்டேன் பெட்ரோலையும் 61 எரிபொருள் நிலையங்கள் லங்கா ஒட்டோ டீசலையும் 50 வீதம் வரையிலான குறைந்தபட்ச கையிருப்பை பேணுவதற்கு தவறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக செயற்படும் எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் நிலையங்கள் கடந்த தினங்களில் போதுமான எரிபொருளை கொள்வனவு செய்யாத காரணத்தினால் நாட்டில் பல பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் உருவாகும் நிலைமை ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், எரிபொருள் கையிருப்பு தொடர்பில் எவரும் குழப்பமடைய தேவையில்லை என்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான கையிருப்பு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.