கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் தரிந்து உடுவரகெதர பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோத கூட்டமொன்றில் கலந்துகொண்டமை, அரச ஊழியருக்கு அழுத்தம் விடுத்தமை உள்ளிட்ட குற்றவியல் குற்றச்சாட்டுகளின் கீழ் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை அவர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரையின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தரிந்து உடுவரகெதரவை பார்வையிடுவதற்கு புதுக்கடை பதில் நீதவான் பிரசன்ன அல்விஸ் சனிக்கிழமை அங்கு சென்றிருந்துடன், அதனை தொடர்ந்து அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டமை மற்றும் தாக்கப்பட்டமைக்கு உள்நாட்டு, வௌிநாட்டு ஊடக அமைப்புகள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.