September 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு வழங்கிய வாக்குறுதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின் வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் தடவையாகும்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் கொழும்பில் சிநேகபூர்வ மற்றும் சாதகமான இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

சர்வதேச தொடர்புகளில் பிரான்ஸின் ஈடுபாட்டிற்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல், வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு மற்றும் இந்து – பசுபிக் வலய பிரச்சினைகள் தொடர்பில் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் பிரான்ஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி இணக்கப்பாட்டிற்கான மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தான் நடத்திய கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி மக்ரோன் நினைவு கூர்ந்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்பதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்ததோடு,  இலங்கையின் நான்காவது பெரிய கடன் வழங்குனர் என்ற வகையில்  கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும்  உறுதியளித்தார்.