மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுப்பதற்கான கூட்டு அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் காலங்களில் முன்வைக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, காணி அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோருடன் இணைந்தே இக் கூட்டு அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்படும் எனவும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் சுமார் 2 ,35 000 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. இந்திய அரசாங்கமும் வீடுகளை அமைத்துக்கொடுக்கின்றன. இலங்கை அரசாலும் வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு காலம் எடுக்கலாம் என்பதனால் தான் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கெஞ்சி கேட்டால் அது பிச்சை, துணிந்து கேட்டால்தான் அது உரிமை. எனவே, காணி உரிமையை துணிந்து கேட்டுள்ளோம். அது நிச்சயம் கிடைக்கும் என்றும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.