உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான நிதி இதுவரையில் நிதி அமைச்சினால் விநியோகிக்கப்படவில்லை.
இதனால் திட்டமிட்டவாறு எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாத நிலைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தள்ளப்பட்டுள்ளது.
அச்சுப் பணிகளுக்கான நிதி கிடைக்காவிட்டால், வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாது என்று அரச அச்சகம் அறிவித்துள்ளது. அத்துடன் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளுக்காக தபால் சேவை உள்ளிட்ட ஏனைய விடயங்களுக்கான நிதியையும் வழங்க முடியாத நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது.
இதனால் ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு ஆணைக்குழு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 4 ஆம் திகதி இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுத்து அறிவிப்பதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை நேற்று முதல் ஆரம்பிக்கப்படவிருந்த தபால் மூல வாக்கெடுப்பும் திகதி அறிவிக்கப்படாது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தேர்தலை நடத்தக்கூடிய திகதி தொடர்பில் தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொண்ட பின்னர் அறிவிப்பதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.