January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ், இராணுவ பாதுகாப்புடன் எரிபொருள் விநியோகம்!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்துவதற்கு எதிராக தொழிற்சங்க ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக எரிபொருள் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் பல பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன வரிசைகள் உருவாகியுள்ளன.

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சேவையை பெற்றுக்கொள்ளும் அதிக வருமானம் கொண்ட சுமார் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 4 சர்வதேச நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதன்படி கடந்த 27 ஆம் திகதி முதல் பெட்ரோலிய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு பெட்ரோலியக் கூட்டுத்தாபன முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், அவற்றை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆதரவளிப்பார்கள் என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.