340 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது.
இதனை தொடர்ந்து அந்த சபைகளை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் 341 உள்ளூராட்சி சபைகளில் எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 340 சபைகளுக்கான தேர்தல் 2018 பெப்ரவரி மாதத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் அவற்றின் பதவிக்காலம் முடிவடையவிருந்த போதும், அப்போதைய ஜனாதிபதியினால் அவற்றின் பதவிக்காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டது.
இதன்படி 340 உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் மார்ச் 19 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
அவற்றுக்கான தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் காணப்படும் நெருக்கடி நிலைமையால் அந்தத் தேர்தல் ஒத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு புதிய சபைகள் அமைக்கப்படும் வரையில், அவற்றை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.