இலங்கை முழுவதும் தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று காலை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
வரி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாக்க கொண்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சுகாதாரம், கல்வி, துறைமுகம், போக்குவரத்து, மின்சாரம், நீர்விநியோகம், தபால், வங்கி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளன.
இதனால் அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் பாடசாலைகள் மாணவர், ஆசிரியர்கள் இன்றி மூடப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் பல இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மின்சார சபை ஊழியர்கள், நீர்வழங்கல் வடிகாலமைப்பு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் மின் மற்றும் நீர்த்தடைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொழும்பு துறைமுகத்தில் தினசரி பணிகள் முடங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமாகவே இது முன்னெடுக்கப்படுவதாகவும், தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் விரைவில் தொடர் வேலைநிறுத்தத்தில் குதிப்போம் என்றும் தொழிற்சங்கங்களின் கூட்டணி அரசாங்கத்தை எச்சரித்துள்ளது