இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினால் நாடளாவிய ரீதியில் மார்ச் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கங்களும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன.
இதனால் நாளைய தினத்தில் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடசாலைகளில் நாளைய தினத்தில் நடத்தப்படவிருந்த தவணைப் பரீட்சையை வேறு தினத்தில் நடத்துவதற்கு சில மாகாணங்களின் கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி மேல் மாகாணத்தில் உள்ள பாவடாலைகளில் 9ஆம் தரத்திற்குரிய பரீட்சை 21 ஆம் திகதியும், 10 மற்றும் 11 ஆம் தரத்திற்குரிய பரீட்சைகள் 22 ஆம் திகதியும் நடைபெறும் என்று மேல்மாகாண கல்வி பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதேவேளை மத்திய மாகாணத்தில் 6 தொடக்கம் 9 ஆம் தரம் வரையிலான வகுப்புகளுக்கு 17 ஆம் திகதியும், 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கு 22 ஆம் திகதியும் பரீட்சை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மற்றைய மாகாணங்களின் பாடசாலைகளின் அதிபர்களுக்கும் இதுபோன்ற அறிவித்தல்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.