January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏப்ரல் 25 தேர்தல் நடக்குமா?

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்த போதும், தேர்தலுக்கான போதுமான நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலுக்கான நிதியை விநியோகிப்பது தொடர்பில் இதுவரையில் நிதி அமைச்சு சரியான பதிலை வழங்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியை விநியோகிக்காது தடுத்து வைத்திருக்க முடியாத வகையில் உயர்நீதிமன்றத்தினால் அண்மையில் நிதி அமைச்சுக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தது.

எனினும் தேர்தலுக்கான நிதியை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலைமை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இதனால் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால் மார்ச் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பை குறித்த தினத்தில் நடத்த முடியாது போகும். அதேபோன்று ஏப்ரல் 25 ஆம் திகதியும் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமையில் கூடிய விரைவில் தேர்தலுக்கான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சரான ஜனாதிபதிக்கு சில தினங்களுக்கு முன்னர் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்திற்கான பதில் இந்த வாரத்திற்குள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.