
அரசாங்கத்தின் வரிக் கொள்கைத் திட்டத்திற்கு எதிராக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்றைய தினத்தில் நான்கு மாகாணத்தில் போராட்டத்தை ஆரம்பித்துள்ள அந்த சங்கத்தினர் எதிர்வரும் நாட்களில் மற்றைய மாகாணங்களிலும் போராட்டத்தை தொடர திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி மேல், மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், குறித்த பிரதேசங்களின் வைத்தியசாலைகளில் அவசர சேவைகள் பாதிக்கப்படாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மகப்பேறு மற்றும் சிறுவர் மருத்துவமனைகள், தேசிய புற்றுநோய் நிறுவனம், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள், தேசிய மனநல நிறுவனம் மற்றும் இராணுவ மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணிகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், புதன்கிழமை முதல் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.