November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலவச டேட்டா போர்வையில் வாட்ஸ்அப் ஊடாக மோசடி

இலவச டேட்டா வழங்கும் போர்வையில் வாட்ஸ்அப் மூலம் ஸ்மார்ட் கைப்பேசி கட்டமைப்புகளை முடக்கக்கூடிய,  தீய மென்பொருள் (Malware) அனுப்பப்பட்டு வருவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் தகவலுடன் வரும் இணைப்பைக் கிளிக் செய்வதுடன், அதை 20 அல்லது அதற்கு மேற்பட்ட சமூக ஊடக பயனாளிகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறும் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போலி வாட்ஸ்அப் தகவலில் தனிப்பட்ட விவரங்களை வழங்குமாறு கோரப்படுவதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச டேட்டாவைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இணையத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களும் இவ்வாறு தமக்கு வரும் வாட்ஸ்அப் செய்தியை ஆராயாது தங்கள் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற போலி செய்திகள் ஸ்மார்ட்போனில் தீய மென்பொருளை (Malware) நிறுவுவதற்கும், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சமூக ஊடக கணக்குகளை ஹெக் செய்வதற்கும் வழிவகுக்கும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் குறிப்பிட்டுள்ளது.