July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘எல்பிஎல்’ போட்டிகளை வெளிநாடுகளில் நடத்துவதற்கு ஆராய்வு

‘லங்கா பிரீமியர் லீக்’ இருபது -20 கிரிக்கெட்  போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்காக சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்தப் போட்டிகளை வெளிநாடுகளில் நடத்த முடியுமா என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் தொடங்கவிருந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கொவிட் வைரஸ் தொற்று நிலைமை காரணமாக நவம்பர் வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்படி நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை தொடரை கண்டி, பல்லேகேல சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நாட்டில் மீண்டும் கொரொனா தொற்று பரவல் நிலைமை ஏற்பட்டுள்ளதால், அந்தப் போட்டிகளுக்கான அனுமதி இன்னும் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படவில்லை.

இந்நிலையிலேயே இதனை வெளிநாடுகளில் நடத்த முடியுமா என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றது.

இந்த விடயம் தொடர்பாக தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்‌ஷ,  புதன்கிழமை சுகாதார அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போட்டியை திட்டமிட்டபடி இங்கேயே நடத்த முடியுமென எதிர்பார்ப்பதாகவும்  இதற்கு தேவையான அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றி போட்டியை நடத்த முடியுமாக இருக்குமென நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.