நாட்டில் உள்ளூராட்சி தேர்தலுக்காக உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகாது இருக்கும் நிலையில் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக எப்படி கூற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதாக அறிவித்திருந்தாலும் அந்தத் தீர்மானம் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து எடுத்தது அல்லவெனவும், இதனால் அந்தத் தீர்மானம் செல்லுபடியற்றது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்றும், ஆனால் பணம் இருந்தாலும் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படாமையினால் அது தொடர்பில் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.