உள்ளூராட்சி தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை முன்னர் அறிவித்தவாறு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் இராணுவ அதிகாரியொருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட போதும், மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளையடுத்து 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டள்ளது.
கடந்த 10 ஆம் திகதி குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு அதனை மீள விசாரிக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
எனினும் தபால்மூல வாக்கெடுப்புக்கு தினம் குறிப்பிடப்பட்டிருந்தமையால் 23 ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு இடையீட்டு மனு மூலம் மனுதாரர் கேட்டிருந்தார்.
இதன்படி இன்றைய தினம் அந்த மனுவை எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தயாரான போது, அதற்கு அவசியமில்லை என்றும், திட்டமிட்டவாறு 23 ஆம் திகதியே விசாரிக்கலாம் என்றும் மனுதாரர் சார்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அன்றைய தினத்தில் அதனை மீள எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.