November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய தேர்தல் திருத்தம்: ஜனாதிபதி கலந்துரையாடல்!

தேர்தலின் போது வேட்பாளர்கள் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில் தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்றை நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இளைஞர் குழுவொன்றுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இந்த இளைஞர்கள் குழு நாட்டின் பிரதான நாளிதழ் ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்ததுடன், அது தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக அந்த கட்டுரையை எழுதி வெளியிட்ட இளம் ஊடகவியலாளர்களான அனுஷ்கா ஜெயசூரிய மற்றும் செனோன் சல்காது ஆகியோருடன் தன்னை சந்திக்க வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த இளைஞர் குழுவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த சந்திப்பு, இளைஞர்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பதற்கும் அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதிக்கு வாய்ப்பாக அமைந்தது.
இதன்போது, இளைஞர் குழுவினர் தமது பிரச்சினைகளையும் யோசனைகளையும் முன்வைத்தனர். அவர்களின் கேள்விகள் மற்றும் கருத்துக்களை ஜனாதிபதி செவிமடுத்ததுடன் அவர்களுடைய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

பாடசாலை மட்டத்தில் முறையான மனநலக் கல்வி அவசியமானது எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான கல்வி முறையின் அவசியத்தையும் இளைஞர் குழு வலியுறுத்தியதோடு கல்வித் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து இங்கு பிரதானமாக ஆராயப்பட்டது.

பாடசாலைகளில் மனநலம் தொடர்பில் வழங்கப்படும் கவனம் போதுமானதாக இல்லை எனவும் மனநல குறைபாடு உள்ளவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் தொடர்பில் அதிகமாக விடயங்கள் செய்ய வேண்டியிருப்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இத்துறைக்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆளணிகள் இல்லாததே நாடு எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அதனை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பல நாடுகளில் வரி என்பது புதிய கருத்தல்ல. ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை என வரி விவகாரத்தை முன்வைத்து இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தினால் ஆராய முடியும் எனவும் அதற்காக பல குழுக்களை நியமித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குக் குழு மற்றும் பொது நிதிக் குழு உள்ளிட்ட மேலும் பல குழுக்கள் உள்ளன. அவற்றின் செயற்பாடுகளை மேலும் பலப்படுத்த பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலம் கொண்டு வரப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.