விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் இறந்துவிட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் பிரபாகரன் தொடர்பில் இந்திய அரசியல்வாதி பழ.நெடுமாரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் நகைப்புக்குரியது என்றும் இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் எங்கே இருக்கின்றார் என்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழகத்தில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இவரின் இந்த அறிவிப்பை நிராகரிப்பதாகவும், அவரின் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் நளின் ஹேரத், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் தயா மாஸ்டர் ஆகியோரும் பிரபாகரனின் சடலத்தை அவதானித்ததன் பின்னர் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.