உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள போதும், தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்நோக்கும் நிதி நெருக்கடி நிலைமையால் அந்தத் திகதியில் தேர்தல் நடத்தப்படுமா? என்பது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கிடையே தொடர்ந்தும் சந்தேகங்கள் நிலவுகின்றன.
மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கான தபால்மூல வாக்களிப்புகள் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்படாவிட்டால் தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாதென அரச அச்சகர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச அச்சகம் எழுத்து மூலம் இதனை அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதனால் தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்படுமா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடலொன்று இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறவுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிய நிதி இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் தேர்தல் நடவடிக்கைகளை தொடர்வதில் ஆணைக்குழு பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையில் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி, முன்னாள் இராணுவ அதிகாரியொருவரினால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்பட்ட போதும், அதனை குறித்த தினத்திற்கு முன்னர் விசாரணைக்கு எடுத்து அது தொடர்பான அறிவித்தலை பெற்றுக்கொள்ள மனுதாரர்கள் தரப்பினால் இடையீட்டு மனுவொன்று நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த மனு இந்த வாரத்திற்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அது தொடர்பில் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.