January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13 தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை, எந்த வகையிலும் அமுல்படுத்தக்கூடாது என நான்கு பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமாஞ்ச ஆகிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து நாட்டிற்குள் சிக்கலை தோற்றுவித்துள்ளதாக மகாநாயக்க தேரர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், புராதன, வரலாற்று சின்னங்கள், மத அமைப்புகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் பிரிவினைவாதத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் இறைமையை பாதுகாக்கும் பொறுப்புள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்தின் இறைமையை சீர்குலைக்கும் இத்தகைய அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கின்றமை, மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுவதற்கான காரணமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் நிலவுகின்ற பொருளாதர நெருக்கடியினால் பிராந்திய, உலக வல்லரசுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான சில நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலும், நாட்டின் ஒருமைப்பாடு, சுயாதீனத் தன்மையை விபத்தில் ஆழ்த்தும் இத்தகைய பிரேரணைகளை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர்.