க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைத்து நேற்று விசாரணை நடத்திய போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று முன்னர் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டன. எனினும் அதனையும் மீறி கடந்த தினங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டன.
இவ்வாறான நிலைமையில் நேற்றைய தினம் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைத்த மனித உரிமைகள் ஆணைக்குழு, ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளை மீறும் வகையில், தொடர்ந்தும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நேரிடும் என்று எச்சரித்துள்ளது.