13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் இருப்பதால் அதனை நிறைவேற்றியாக வேண்டும். இல்லையேல் புதிய திருத்தத்தை கொண்டு வந்து அதனை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
”37 ஆண்டுகளாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியென்ற வகையில் நான் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தாமல் இருக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் யாராவது 22ஆவது மறுசீரமைப்பைக் கொண்டு வந்து 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிப்பட்ட பிரேரணையொன்றைக் கொண்டு வந்து யாருக்கு வேண்டுமானாலும் அதனை நீக்க முடியும். அதற்கு பெரும்பான்மையானோர் தமது விருப்பத்தை தெரிவிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அப்படியாயின், 13ஐ நடைமுறைப்படுத்த நேரிடும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.