November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சார்ள்ஸின் இராஜினாமா தேர்தலை தாமதப்படுத்துமா?

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பி.எஸ்.எம். சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தான் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அவர், ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையிலேயே இவர் பதவி விலகல் தொடர்பில் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்ளூராட்சி தேர்தல் தினம் தொடர்பாக சர்ச்சைகள் நிலவுகின்றன. ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருந்து மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அரசாங்க தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதேவேளை உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இன்னும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகவில்லை. அவ்வாறு வர்த்தமானி வெளியிடப்படுமாக இருந்தால் அதில் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும்.

இந்நிலையில் குழுவின் உறுப்பினர் ஒருவரேனும் விலகினால் வர்த்தமானி அறிவித்தல் மேலும் தாமதமாகும்.

எவ்வாறாயினும் புதிய உறுப்பினர் ஒருவரை நியமித்த பின்னரே அந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியும். அரசியலமைப்பு பேரவையே அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஆனால் அரசியலமைப்பு பேரவைக்கும் முழுமையான உறுப்பினர்கள் நியமிக்கப்படாதிருக்கும் நிலையில் அந்தப் பேரவையால் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாது.

இதனால் தேர்தல் தாமதமாகும் நிலைமையே காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.