November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மார்ச் 9 உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா?

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறுமென இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள போதும், இன்னும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை.

ஆணைக்குழுவினால் தேர்தல்கள் தினம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமாக இருந்தால் அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்க வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹநாமஹோவா தெரிவித்தள்ளார்.

இதேவேளை தேர்தல் தினம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் போது, ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களின் இணக்கப்பாடு அவசியமென்றும் அதனை வர்த்தமானி அறிவித்தல் ஊடாகவே காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் தினம் தொடர்பில் அறிவித்துள்ள போதும், அதனை வர்த்தமானியில் அறிவிக்காமை சர்ச்சைக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தேர்தலை நடத்துவதற்கு போதுமான நிதி இல்லை என்று நிதி அமைச்சின் செயலாளர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், உள்ளூராட்சி தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள போதும், அந்த நிதியை வழங்க முடியுமா? என்று தேர்தல்கள் ஆணைக்குழு அந்த கடிதம் ஊடாக நிதி அமைச்சை கேட்டுள்ளது.

இதனால் குறித்த தினத்தில் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பில் தொடர்ந்தும் சந்தேகங்கள் நிலவுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.