January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கு பீபாவினால் தடை!

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் (FIFA) அறிவித்துள்ளது.

ஜனவரி 21 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரையில் இந்த உறுப்புரிமை இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் உபாலி ஹேவகேவுக்கு சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம், கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் ஜனவரி 14 ஆம் திகதி நடைபெற்றது. அதில் முன்னாள் எம்.பியான ஶ்ரீ ரங்கா தலைவராக தெரிவாகியிருந்தார். எனினும் இதனை சர்வதேச சம்மேளனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில், நிர்வாகக் குழு தேர்தலில் விளையாட்டுத்துறை அமைச்சர் மூன்றாம் தரப்பாக தலையிட்டமை, விளையாட்டு அமைச்சினால் வாக்குறுதியளிக்கப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளாமை மற்றும் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் முன்னர் இணங்கிய விதிகளுக்கு அமைய செயற்படாமை போன்ற காரணங்களினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்றுவிப்பாளரும் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.