November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”75 ஆவது சுதந்திர தினம் எதிர்காலத்திற்கான முதலீடு”

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் வேண்டுகோள் விடுத்தார்.

மிகுந்த இக்கட்டான பொருளாதார பின்னணியின் மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இவ்வருடம் மருந்துகளுக்காக சுமார் 30-40 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தின் முறையான விவசாய கொள்கைக் காரணமாக இம்முறை மேலதிக நெல் அறுவடை கிடைத்திருப்பதாகவும் குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு தலா மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசி வீதம் 02 மாதங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுதந்திர தினத்துக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜனாதிபதி, அது எதிர்காலத்துக்கான முதலீடு என தெரிவித்தார்.

மேலும் நூற்றாண்டு சுதந்திர விழாவை அடைவதற்குள்ள எதிர்வரும் 25 வருடங்களில் நாட்டுக்கு அவசியமான மறுசீரமைப்புகளை முன்னெடுப்பதற்கு அவசியமான பல புதிய நிறுவனங்களையும் சட்டங்களையும் அறிமுகம் செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.